மறக்கமுடியாத மார்கழி இருபத்தாறு! (இருளாக விடிந்த இருபத்தாறு)
நாம் பிறந்ததிலிருந்து இந்த நொடிப்பொழுதுவரை எத்தனை எத்தனை இன்ப துன்பங்களை நாம்
அனுபவித்திருக்கின்றோம். அவைகள் நிகழ்ந்த நாட்கள் பல எம் நெஞ்சங்களை
இன்றும் விட்டகழாது இருக்கின்றன. அதிலும் இந்த மார்கழி இருபத்தாறு எம்மால்
உயிர் உள்ளவரை மறக்கமுடியாத நாளே.
அன்று அந்த மார்கழி இருபத்தாறில் என் அனுபவத்தை
உங்களுடன் எனது வலைப்பதிவினூடாக மீட்டிக்கொள்கிறேன்..
2004 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26 ஆம் திகதி
காலை ஆறு மணி நம்நாட்டில் 9.00 மணி அன்று நான் இலங்கையில் இல்லை மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்தேன். இரவு வேலை செய்து விட்டு வழமையாக காலை 6.30 மணிக்கு தொலைக்காட்சியில் செய்தியறிக்கை
பார்ப்பது வழக்கம். அன்றைய தினம் எனக்கு மனதில் ஏதோ எதற்கும் உற்சாகமின்றி மனம் சஞ்சலமாக
இருந்தது.
அன்றைய தினம் நான் தொலைக்காட்சியை திறக்கவில்லை வெளியில் ஏதோ ஆரவாரம் கேட்டது .எங்களுடன் தொழில்
புரியும் நண்பர்கள் பலர் பதட்டத்துடன் அங்கும்
இங்கும் செல்வதைப் பார்த்தேன் எனக்கு ஒன்றுமே
புரியவில்லை.
அப்போது நண்பர் ஒருவர் கடல் அலை ஊருக்குள் புகுந்துவிட்டதாம்.
நமது பிரதேசமெல்லாம் மூழ்கிவிட்டதாம் என்றார். இதை நம்புவதா இல்லையா என்றே புரியவில்லை.
எங்கள் ஊரைச்சேர்ந்த மற்றொருவர் ‘’பாண்டிருப்பில் மாரியம்மன் கோவில்வரைக்கும் கடல் வந்துவிட்டததாம்
என்றார். என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவிலை. உடனே எங்கள் வீட்டுக்கு தொடர்பேற்படுத்தினேன்
தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. பல தொலைபேசிகளுடன் பலமுறை தொடர்புகொண்டும்
பலன் இல்லை.
தொலைக்காட்சியை திறந்தேன் ‘’ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டுள்ளது இலங்கை உட்பட் சில நாடுகளின்
பெயர்களை அறிவித்தார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை அறிவுப்புக்களில் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே
சென்றன. எங்கள் உறவினர்கள் யாருடனும் தொடர்பு
கிடைக்கவில்லை அயல் கிராம நண்பர்கள் ஒரு சிலரின் தொடர்பு கிடைத்தது அதுவும் பேசமுடியாத
நிலையில் எதுவுமே சரியாக விளங்கவில்லை வாகன
இரைச்சலுடன் சனங்களின் அழுகுரல்கள் கேட்டன.
உறவினர்களின் எந்த தொடர்பும் கிடைக்காத நிலையில் தொலைக்காட்சியின்
செய்தியறிக்கை மட்டும் தஞ்சமான நிலையில் நாங்கள்
செய்வதறியாது கூடியிருந்தோம் இரவு வரை தொடர்பு சரியாக எவருடனும் கிடைக்காத நிலையில்
.
இரவு 10மணியளவில் நண்பர் ஒருவருடன் தொடர்பு
கிடைத்ததது .அந்த நொடி சற்றும் எதிர்பாராத அந்தப்பதில் ''கேதீஸ் எமது பகுதியின் கடலை அண்டிய
பகுதிகள் முற்றாக அழிந்துவிட்டது. அதிகமான
உயிரிழப்புகள் மக்கள் மேற்குப்பக்கமாக இடம்பெயர்ந்து
விட்டார்கள். சடலங்களை நாங்கள் வைத்தியசாலைக்கு
அனுப்பிக்கொண்டிருக்கிறோம். பல சடலங்கள் கடலுடன் சென்றுவிட்டன. உங்கள் வீடுகளும்
முற்றாக சேதம் நாங்கள் தற்போது பாண்டிருப்பின் மேற்குப்பக்கமாக நிற்கிறோம். உங்கள்
குடும்பத்திலும் சிலர் உயிரிழப்பு உங்கள் அம்மம்மா அம்மப்பா உங்களின் சின்ன மாமா மற்றவர்கள்
எல்லோரும் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்கள் நான் அவர்களை சந்தித்தேன்
மனதை தேற்றிக்கொள் ஊருக்கே அழிவு’’ என்ற அந்த பதில் என்
தலையில் ஓங்கி ஆணி அறைந்தாற்போல் இருந்தது செய்வதறியாது அம்மம்மா
என்று வாய்விட்டழுதேன். அந்த நொடிப்பொழுதை
இன்றும் மறக்கமுடியவில்லை…
நாங்கள் பிறந்து வளர்ந்த அந்த மண் என்னை
போய்வா மகனே! என தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக என்னை வளர்த்த அம்மம்மாவின் இறுதியாக என்னை வழியனுப்பிய கண்ணீர் நிறைந்த அந்த கண்கள் சென்றுவா என்று வாழ்த்தியனுப்பிய
அம்மப்பாவின் கவலை நிறைந்து காணப்பட்ட அந்த முகம் என்னை தூக்கி வளர்த்த சின்ன மாமாவின்
உருவம் இன்னும் மறக்கமுடியவில்லை.
இதே போன்று எத்தனை எத்தனை சம்பவங்கள் காலையில் வழியனுப்பிய தாய் இருந்தே வீடே இல்லை. போகும்போது கையசைத்து வழியனுப்பிய குழந்தை நின்ற வீதியே இல்லை. போய்வாருங்கள் என புன்னகைத்த மனைவி நின்ற அந்த தடமே இல்லை இவ்வாறு ஒரு நொடிப்பொழுதில் எம் உறவுகளின்
அனைத்தையும் அழித்த அனைவரையும் தவிக்கவிட்ட சுனாமி பேரலை ஏற்பட்ட அந்த மார்கழி இருபத்தாரை எப்படித்தான்
மறக்கமுடியும்?
ஊருக்கு சென்றேன் எங்கள் கிராமமே சுடுகாடாய் காட்சியளித்தது பார்க்கும் இடமெல்லாம்
உடைந்து வெடித்து பிளந்து காணப்பட்ட கட்டிடங்களும் வீதியே இல்லாத பரந்த பிரதேசமும்
மரங்கள் அற்ற மயானபூமியுமாக இப்டியாக காட்சியளித்தது.
நண்பர்கள் உறவினர்கள் என எல்லோருமே ஆழுக்கு ஒரு இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்தார்கள்
மாலை ஆறு மணியின் பின்னர் கிராமமே வெறிச்சோடி இருந்தது .
சில வருடங்களின் முன்னரான எம் மண்ணின் நினைவுகள் என் மனத்திரையில் வந்து வந்து சென்றன. மாலை நேரத்தில் நகைச்சுவைகள் பல பேசி நட்புடன் நாங்கள் இருந்த கடற்கரை மணல் இல்லை. இளைஞர்கள் பல
ஒன்று சேர்ந்து நாங்கள் உருவாக்கிய இளைஞர்கழகம் இல்லை. .நாங்கள் இயக்கிய பாரதியார்
வாசிகசாலை இல்லை. எங்கள் பகுதியில் நாங்கள் செய்யும் ஒவ்வொரு சமூகப்பணியையும் கூடி
இருந்து திட்டமிட்ட அந்த கட்டிடம் இல்லை.
கழகத்தில் பொறுப்புமிக்க கணக்காளராக இருந்த
எங்கள் கழக உறுப்பினரும் இல்லை. நாங்கள் கூடிப்பேசி
நிற்கும் அந்த முச்சந்திகள் இல்லை. இவ்வாறு
எங்கள் ஊரின் பல தடங்களின் தடயமே இல்லை. ஆண்டுக்கொரு
முறை இந்திய இலங்கை இசைக்கலைஞர்கள் பலர் ஒன்று
கூடும் பாண்டிருப்பு காளிகோவில் வளாகத்தில்
அமைந்திருந்த வேல்முருகு அரங்கம் இல்லை. பாண்டியூரின் கடற்கரைக்கே
அழகு சேர்த்த எங்கள் மகாவிஷ்ணு ஆலயம்
இல்லை; இவ்வாறு
இல்லை இல்லை என எங்களை புலம்பும்படி அனைத்தையும்
ஒரு நொடிப்பொழுதில் சொல்லாமல் இல்லாமல் செய்த அந்த மார்கழி இருபத்தாரை எப்படித்தான்
மறப்பது...
நாட்கள் வருடமாகின பல அரச சார்பற்ற நிறுவனங்கள் இழந்த கட்டிடங்களை அதைவிட அதிகம்
கட்டி முடித்தனர். அழகான பல வீடுளும் உருவாகின.
வீதிகள் செப்பனிடப்பட்டன. அழிந்த சொத்துக்களுக்கு நிகராக சொத்துக்கள் ஈடுசெய்யப்பட்டன ஆனால் எதற்கும் நிகரற்ற இழந்த அந்த
உயிர்களை எங்களால் ஈடு செய்ய முடியுமா?
எதற்கும் நிகரற்ற எங்கள் ஜீவன்கள் வாழந்த பழைய வீடுகள் அதில் இருந்த சந்தோஷங்கள்தான்
எங்கே? குழந்தையின் தாய் எங்கே
தாயின் பிள்ளை எங்கே கணவனின் மனைவி எங்கே பாட்டி எங்கே அக்கா எங்கே தங்கை எங்கே இவைகள்
எல்லாம் எங்கே ?.........
இன்று 14 வருடங்கள் ஆகிவிட்டன எங்கள் ஊரில் சுனாமியின் முன்னர் சந்தித்த நண்பர்களை சந்திக்கமுடியவில்லை மணிநேரம் கூடி நின்று குதுகலமாக பேச நேரம் இல்லை வாய்ப்பும் இல்லை ஆழுக்கு ஒரு திசையில் கலைந்து விட்டோம் ஒன்பது வருடங்கள் இப்போது எல்லோரும் திருமணம் முடித்து வெவ்வேறு பகுதிகளில் சென்று விட்டோம். தொடர்புகள் உறவுகள் இருந்தாலும் முன்னர்போன்று சந்தித்துப்பேச
சந்தர்ப்பம் இல்லை தொலைபேசி கணணி வலையமைப்புகளுடன்
மட்டும் தொடர்புகள்...
எல்லோருடையதும் இயந்திர மயப்படுத்தப்பட்ட வாழ்க்கையாக மாறிவிட்டது. வேலைப்பழு மிக்கவர்களாக இருப்பதுதான் காரணம் இவ்வாறுதான்
இன்றைய நாட்கள் நகர்கின்றன. ஊரில் ஆலயத்திருவிழா
ஏதாவது இன்பதுன்ப சம்பவங்களில் பல நண்பர்களை சந்திக்கும்போது பழைய அந்த பசுமையான நினைவுகளை
மீட்டிப்பார்த்துவிட்டு மீண்டும் சந்திப்போம்
என்ற வாத்தையுடன் விடைபெற்று செல்கிறோம்.
ஆனால் எங்கிருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் உண்மையான நட்பும் ஊர்ப்பற்றும் இருந்தால் உறவுகள் என்றும் மண்வாசணையுடன் தொடரும்........
பு.கேதீஸ்
பு.கேதீஸ்


.jpg)



No comments:
Post a Comment