23 Jul 2016

இருளான ஜூலை -27!

இருளான  ஜூலை -27!

இந்த உலகத்தில்  ஈடு இணையற்ற உன்னதமான உறவு அம்மா ஒன்றே ஆகும். எம்மை படைத்து வளர்த்து உருவாக்கி
வழிநடத்தி எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம் அம்மாவே..


அன்னையை இளமையில்  இழப்பவர்கள் இந்த உலகில் எதை எப்படி அனுபவித்து வாழ்ந்தாலும் அவ் வெற்றிடம் இருந்து கொண்டே இருக்கும்.



 ஊன் உறக்கமின்றி தன் வாழ்வையே எங்களுக்காய் அர்ப்பணித்த எங்கள் அம்மா, இளமைக்காலத்தில்  நாங்கள் புத்தி அறியும்வரை வறுமையில் வாழ்ந்தாலும் ஏழ்மையின் தாக்கத்தை எங்கள் கண்களில் தெரியாது தன்னை உருக்கி எங்களை வளர்தது எடுத்த அம்மாவுக்கு நாங்கள் வளர்ந்ததும் கடமை செய்ய அவர் எங்களுடன் இல்லை என்பதை நினைக்கையில் நெஞ்சம் விம்முகிறது.


தன்பிள்ளை வளர்ந்து பக்குவமடைந்து உயர்வதை பார்த்து மனம்குளிரும் தாயின் ஆனந்தத்தை பார்த்து திருப்பியடையும்போதே ஒரு மனிதன் பிறந்ததன் முதல் பயனை அடைகிறான். அந்த பாக்கியத்தை அடையும் முன்பே இளமையில் எங்கள் தாயை இறைவன் பறித்த அந்த நாள்தான் ஜூலை - 27  இம்மாதத்துடன் 13 என்ன எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த இருள் நீங்காது.



27.07.2003



பெயரைப்போல உள்ளம் கொண்ட எங்கள் அம்மா எங்களுக்கு விட்டுச்சென்ற சொத்து. மகாலெட்சுமியின் பிள்ளைகள் என்று பெருமையாய் பிறர் எங்களை புகழ்ந்து பேசுவது இன்றும் அம்மா எங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற உணர்வை ஊட்டுகிறது.


மரணத்தை வென்று இன்றும் எங்கள் எல்லோரின் மனங்களிலும் வழிகாட்டியாய் வாழ்ந்துகொண்டிருக்கும்  எங்கள் அம்மா எங்களுடனேயே வாழ்கிறார் வழிநடத்துகிறார் எங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறோம்.
அம்மா அம்மாதான்....




பசிக்குதம்மா இப்போ!

அம்மா!
எங்கள் அன்பால் உறைந்த பெருஞ்சுடடே
காலக்காற்றில் அணைந்து போனது பொய்யாகாதோ
அன்னை மடி என்னும் முதல் தொட்டிலை
மரணம் ஏன்? மௌனமாய் திருடியதோ!

அம்மா!
நீங்கள் அன்பின் இன்னொரு வடிவமாக
எங்களை அள்ளி அணைக்கும் காட்சி
என் மன நீள்வெளியில்
இன்றும் தெரிகிறதே!

அம்மா!
தம்பி எழுத்துக்கூட்டி
அம்மா என்று படிக்கும்போது
எதிரில் நீங்கள் இல்லையே
நெஞ்சம் விம்மி, விம்மி வெடிக்கிறதே!

அம்மா!
நம் கண்ணீர் சுமைகள்
கரைகின்ற காலமதில்
காலனுக்கும் ஏனம்மா பிடிக்கவில்லை
கடவுளும் இதை மன்னிப்பாரா?

அம்மா!
கோவில் போல் வாழ வேண்டிய
நம் இல்லம்
கருவறை இல்லாத கட்டிடம்
போலானது ஏனம்மா?

அம்மா!
உங்களை காலம் முழுவதும்
கண்கலங்காமல் வாழவைக்க
ஆவலாய் ஆசை படைத்தேன்
காலக் கெதியில் உங்களை பறித்த காலன் கொடியவனே!

அம்மா!
நீங்கள் மறைந்த பின்னர்
எனக்கு பொழுதும் கறுப்பாகவே விடிகிறது
விழியோ  கண்ணீரை கசிகிறது
கனவிலும் வாழ்க்கை கானல் நீராகவே தெரிகிறது!
27.07.2003

1 comment:

  1. உ ண்மைதான்
    அம்மாவின் உறவுதான் மிகபெரிய உறவு
    அம்மாவின் பிரிவுதான் மிக பெரிய பிரிவு
    - அமுதநதி சுதர்சன்

    ReplyDelete