3 Feb 2014

என்றும் இனிக்கும் நினைவுகள்!





என்றும் இனிக்கும் நினைவுகள்!


   நவீன மயப்படுத்தப்பட்ட யுகம் உண்ணுவதற்கு,  உறங்குவதற்கு மட்டும் என்ன எதற்கும் நேரம் போதவில்லை என்ற புலம்பும் இயந்திரமயமான வாழ்வின்காலம். 

     
இன்று ஒரு தேசத்தில், விடியும்போது இன்னுமொரு தேசத்தில் என கண்டம் விட்டு கண்டத்திற்கு அடுத்த தெருவுக்கு செல்வதுபோல் செல்லக்கூடிய எல்லாமே நவீன மாற்றங்களுடன் சுழழும் உலகம்.

     எங்கு என்ன எப்படித்தான் வாழ்ந்தாலும் உறவு, அன்பு, பாசம், பற்று, நினைவுகள் என்பவற்றை எவ்வாறான நிலையிலும் நிரந்தரமாக மறக்கமுடியாதவை. அவை என்றுமே எம்முடனேயே  எங்கும் பயணிப்பவையே.

 நாம் எப்படியான நிலைகளில் இன்பமாக, துன்பத்துடன், களைப்பில், களிப்பில் இருந்தாலும் மேற்சொன்ன எம்முடன் ஒட்டி வாழும் உணர்வுகளை உணரும்போது, நினைக்கும்போது, பேசும்போது, உறவாடும்போது எல்லாவற்றுக்கும் மேலாக அவை எம்மனதிற்கு ஒரு பெரும் சந்தோஷத்தை தரும் பசுமைக்கால நினைவுகளே..

 நண்பர்களே என்ன கேதீஸ் திடிரென இதை ஏன் சொல்லிக்கொண்டிருக்கின்றான் என்றா யோசிக்கின்றீர்கள்?  சொல்கின்றேன்.
நேற்றைய தினம் நான் எனது இடத்திற்கு அருகில் இருக்கும் சிறுவர்கள் பொழுதுபோக்கு மையத்திற்கு ஒரு அலுவலாக சென்றிருந்தேன்.

 அங்கே கணனி விளையாட்டுக்கள் வீடியோ விளையாட்டுக்கள் என சிறுவர்களுக்கான பல நவீன விளையாட்டு இயந்திரங்கள் இருந்தன சிறுவர்களும் கூட்டமாக இருந்தார்கள். அங்கு ஒரு விடயத்தை அவதானிக்க முடிந்தது வரும்போகும் சிறுவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்களாக நெருங்கிய தொடர்புகள் இல்லாதவர்களாகவே வருவதும் போவதுமாக இருந்தார்கள்..




இன்றை நவீன காலத்து சிறுவர்களின் பொழுதுபோக்கு சூழழும் அன்றைய எமது சிறுவர்களின் பொழுதுபோக்கு சூழழையும் ஒப்பிட்டு பார்த்தேன் உண்மையில் அதற்கு இது எவ்வகையிலும் நிகர் இல்லை என்று கூறலாம்.



இதை அவதானித்த அவ்வேளையில் என் மனத்திரயில் ஓடிய என்றும் இனிக்கும்  அந்த நினைவுகளை உங்களுடன் பகிர்கிறேன்...

 பாடசாலை முடிந்ததும் முண்டியடித்துக்கொண்டு வெளியே வந்து தெருக்கடையில் வரிசையாய் வாங்கிச்சூப்பிய விழா ஐஸ்ப்பழம்...

 கவலைகளற்று பட்டாம்பூச்ச்சியாய் வீட்டுக்கு பறந்து செல்ல சமைத்த உணவை காத்திருந்து ஊட்டிவிட்ட அம்மாவின் அன்பு...

 அம்மாவின் கண்டிப்புக்கு அடி பணிந்து வெயில் சாயும்வரை காத்திருந்து தெருமுனைக்குச் சென்று அயல்வீட்டு நண்பர்கள்,   அண்ணன், தம்பி என எல்லோரும் விளையாடிய கிட்டிப்பொல்லு, கட்டைப்பந்து, குழிப்பந்து என எல்லோரும் குதுகலமாய் கூடி விளையாடிய பொழுதுகள்...

 மாலைப்பொழுதில் படிக்கும்போது புத்தகத்தில் வைத்த மயில் இறகு குட்டிபோட்டுள்ளதா என்று அண்ணன் தம்பியுடன் கலந்துபேசிய இரவுகள்.

 வீட்டு முற்றத்தில் குப்பி விளக்கு வெளிச்சத்தில் பாட்டி சொல்லித்தந்த கதைகள்..

பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் ஒரு வடை வாங்கி பத்துப்பேர் பிகிர்ந்துண்ட பசிப்பகல்..

பாடசாலை முடிவடைய ஒலிக்கும் மணியோசைக்காக இறுதிப்பாட வேளையில்  கடிகாரத்தை பார்த்து நிமிடங்கள் எண்ணிய நினைவுகள் என எத்தனை எத்தனை நினைவுகள்..

என்றும் மறக்கமுடியாதவையே.......நண்பர்களே உங்களையும் அன்றை நாட்களுக்கு அழைத்துச்செல்கிறதா இந்நினைவுகள்....?

No comments:

Post a Comment