பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று கூறிக்கொண்டு உணவகங்களில் பணம் கறக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.நேற்று வாழைச்சேனையிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் சுகாதார பரிசோதகர் சீருடையுடன் நுழைந்த இருவர் தாம் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் எனவும் தரமற்ற உணவு வகைகளை தயாரித்து விற்பதாக தமக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும் இது தொடர்பாக தாம் பரிசோதித்து பொலிஸாரின் உதவியுடன் கடையை சீல் வைத்து மூடப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ந்துபோன உணவக உரிமையாளர் எங்கே தனது பிழைப்பில் மண்விழுந்து விடுமோ என்று அஞ்சி பேரம் பேசியுள்ளார். வந்தவர்களும் பொய்யாக உணவகத்தை பரிசோதித்து விட்டு 20ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் என்று கூறி பணத்தை வாங்கிக் கொண்டு எஸ்கெப் ஆகிவிட்டனர். அப்பகுதியிலுள்ள உண்மையான சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் விடயத்தை விளக்கியபோதுதான் வந்தவர்கள் போலி ஆசாமிகள் என தெரியவந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் இவ்வாறு பல உணவக உரிமையாளர்கள் பணத்தை இழந்துள்ள தாகத் தெரிய வருகிறது. வருபவர்கள் டெங்கு நோயைக் காரணம் காட்டியே இவர்களுடன் பேரம் பேசுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆள்மாறாட்ட பணமோசடியில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு பிரதேச வர்த்தகர்கள் வேண்டு கோள் விடுக்கின்றனர்.
நன்றி இருக்கிறம்
No comments:
Post a Comment